Thursday 15 September 2011

மகிழ்ச்சி அறக்கட்டளை குறிப்புகள்









மகிழ்ச்சி அறக்கட்டளை துவக்க விழா

சென்னை, ஆக.18 (டிஎன்எஸ்) ஒரு ஏழை கல்வி கற்க, வசதி படைத்த ஒவ்வொருவரும் உதவேண்டும் என கவிஞர் அப்துல் ரகுமான் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கூறினார்.

மகிழ்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னையில் ஆக.15 அன்று கல்வி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிறுவனர் தலைவர் அ.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளர்களான கவிக்கோ அப்துல் ரகுமான், இந்திய செஞ்சிலுவைச் சங்க கெளரவ செயலர் சத்தியநாராயணன், உலக தமிழாராய்ச்சி மையத்தின் இயக்குநர் பேரா. முனைவர் கரு. அழ. குணசேகரன் மற்றும் டாக்டர் பி.எ. சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

மகிழ்ச்சி அறக்கட்டளையின் சார்பில் 20 மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவித் தொகையாக மொத்தம் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் 110 பேருக்கு புத்தகப் பைகள் வழங்கப்பட்டன. அதோடு ஏழைப் பெண் ஒருவருக்கு தையல் எந்திரம் உட்பட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அப்துல் ரகுமான் பேசியதாவது; வசதி படைத்த ஒவ்வொருவரும், ஒரு ஏழை கல்வி கற்க உதவவேண்டும். பிறருக்கு உதவி செய்து, அதை பெறுபவர் அடையும் மகிழ்ச்சியில் இறைவனைக் காணலாம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தால் ஏழைகளே இருக்க மாட்டார்கள். யாராவது ஒருவருக்கு உங்களால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள்; இதுவே பெரும் புரட்சியை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் பாஸ்ட் ட்ராக் கால் டாக்சி இயக்குனர் ரெட்சன் அம்பிகாபதி, எஸ்.டி கூரியர் நிர்வாக இயக்குநர் நவாஸ் கனி உள்ளிட்ட சமுதாய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அறக்கட்டளையின் செயலாளர், வழக்கறிஞர் செ.சையது ஜாகிர் உசேன் நன்றி உரையாற்றினார்.

முன்னதாக அறக்கட்டளையின் பொருளாளர் முருகேசன் வரவேற்றார். (டிஎன்எஸ்)